×

 உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது - ஜெ.பூங்குன்றன்
 

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் ஜெ.பூங்குன்றன் சங்கரலிங்கம் தனது வலைத்தள பதிவில் அதிமுகவின் தலைமைக்கும்,  கட்சி  நிர்வாகிகளுக்கும் தனது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.

அதில், ’’கழகம் வெற்றி பெற வேண்டும் என்று அந்த ஆண்டவன் நினைக்கிறான். அதற்கு வசதியாய் பல காரணங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள தயாரா? இவைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்றால் உங்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’என்று தெரிவித்திருக்கிறார். 

அவர் மேலும்,  ‘’கழக ஆட்சியில் பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள் பலன் அடைந்தார்காளா? என்பது உங்களுக்குதான் தெரியும். எனக்குத் தெரிந்தது அடையவில்லை என்பதே! எனவே மாநகராட்சி, நகர, பேரூராட்சிக்கு தேவையான உதவியை கழகம் செய்ய வேண்டும்.   இல்லை வளர்ச்சி அடைந்தவர்கள் அவர்களுக்கு உதவ வலியுறுத்த வேண்டும் .   இல்லை தலைவராக தகுதி உள்ளவரை தேர்ந்தெடுத்து உதவி செய்யச் சொல்ல வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்’’ என்கிறார். 

தொடர்ந்து அவர் இதுகுறித்து,   ‘’மேயர், தலைவர் பதவிக்கு அனுபவம் மற்றும் தகுதி உள்ளவர்களின் ஆலோசனையுடன் கவுன்சிலர்களை தேர்ந்தெடுத்திருந்தால் மிகச் சிறப்பு. மாநகராட்சி வார்டுகளை பிரித்து கொடுத்து, தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவி செய்து வெற்றி பெற வைப்பவர்களுக்கு பதவிகளை தரவேண்டும். அதற்கு முன்கூட்டி வாக்குறுதி தரவேண்டும். இப்படி செய்வதே இன்றைய தேவையாக இருக்கும் என்பது என் கருத்து’’ என்று சொல்லியிருக்கும் பூங்குன்றன்,  

’’கழகத்தின் சார்பில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கு இதயதெய்வங்களின் ஆசி என்றும் துணை நிற்கும். போட்டியிடும் நீங்கள் வெற்றி பெற என் மனம் கனிந்த வாழ்த்துக்கள்.  நினைவிருக்கட்டும் நிற்பது உங்களில் ஒருவரல்ல... கழகம்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.