"எம்ஜிஆர் உயில்படி அதிமுக தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க முடியும்”
அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க வின் இன்றைய நிலை கண்ணீர் வர வைக்கிறது. நான் மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் கண்ணீர் வடிக்கும் நிலை தான் இருக்கிறது. கட்சி இரண்டாக உடைந்து விடும் நிலை இருக்கிறது. அதுவும் ஜாதி ரீதியாக பிரிந்து விடுமோ என அச்சமாக உள்ளது. இரட்டைத் தலைமை வேண்டுமென தீர்மானம் போட்டவர்களே, இப்போது ஒற்றைத் தலைமை வேண்டும் என்கின்றனர். அது ஏன் என தெரியவில்லை. இரட்டை தலைமை வேண்டும் என எந்த தொண்டரும் கேட்கவில்லை.
ஜெயலலிதா வகித்த பொதுசெயலாளர் பதவிக்கு யாரும் வர மாட்டோம் என கூறினார்கள். தற்போது அந்த பதவிக்கு வர உள்ளார்கள். எம்.ஜி.ஆர் இறப்பிற்கு முன்னாள் உயில் எழுதி வைத்துள்ளார். அதில் தொண்டர்கள் தான் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். 80 சதவீத தொண்டர்கள் ஆதரவு யாருக்கிறதோ அவர்கள் தான் தலைமை பொறுப்பேற்க வேண்டும். அந்த தேர்தலில் அ.தி.மு.க வை சேர்ந்த கடைக்கோடி தொண்டர் கூட அதில் போட்டியிட முடியும். அந்த தொண்டருக்கு ஆதரவு இருந்தால் அவர் கூட ஆகலாம். எம்.ஜி.ஆர் காட்டிய வழியில் கழகத்தேர்தலை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் சந்திக்க வேண்டும்.
தொண்டர்கள் தேர்ந்தெடுக்கும் நபர் ஒற்றைத் தலைமையேற்கட்டும். ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமே அதிமுக இல்லை. எம்.ஜி.ஆர் எழுதிய உயில் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் உள்ளது. தொண்டர்களை தேர்ந்தெடுக்கம்படி தேர்தலை நடத்தவில்லையென்றால் தேவைப்பட்டால் அதை வைத்து உச்சநீதிமன்றம் வரை செல்வேன். கடந்த பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் செல்லாது என அறிவித்ததால் அனைத்து பொறுப்புக்களும் காலாவதியாகி விட்டதால் தற்போது அதிமுகவில் எவருக்கும் பொறுப்பில்லை. அனைவரும் தொண்டர்கள் தான்” எனக் கூறினார்.