எங்கள் நரம்புகளில் காங்கிரஸின் ரத்தம் உள்ளது. நாங்கள் ஒரு போதும் பா.ஜ.க.வுடன் சேர முடியாது... பணத்துடன் சி்க்கிய எம்.எல்.ஏ.
எங்கள் நரம்புகளில் காங்கிரஸின் ரத்தம் உள்ளது. நாங்கள் ஒரு போதும் பா.ஜ.க.வுடன் சேர முடியாது என்று காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டவரும், அண்மையில் கட்டுகட்டாக பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான இர்பான் அன்சாரி தெரிவித்தார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ஜம்தாரா தொகுதி எம்.எல்.ஏ. இர்பான் அன்சாரி, கிஜ்ரி தொகுதி எம்.எல்.ஏ. ராஜேஷ் கச்சாப் மற்றும் கோலேபிரா எம்.எல்.ஏ. நமன் பிக்சல் ஆகியோர் மேற்கு வங்கம் ஹவுராவில் ஒரு எஸ்.யு.வி. வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தை மேற்கு வங்க போலீசார் சோதனையிட்டனர். வாகனத்தின் உள்ளே பெரும் பணம் இருப்பதை போலீசார் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெரும் பணத்துடன் சிக்கியதையடுத்து, ஜார்க்கண்டில் ஆட்சியை சீர்குலைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சி தலைமை சஸ்பெண்ட் செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் கல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த சூழ்நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் அரசியல் லாபங்களுக்காக எங்களை தவறாக சிக்க வைத்து விட்டார் என்று பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான இர்பான் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவரும், பணத்துடன் பிடிபட்ட 3 எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான இர்பான் அன்சாரி கூறுகையில், ஜார்க்கண்ட முதல்வர் (ஹேமந்த் சோரன்) அரசியல் லாபங்களுக்காக 3 எம்.எல்.ஏ.க்களை தவறாக சிக்க வைத்தார். எங்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் அவர்களுடையது. எங்கள் நரம்புகளில் காங்கிரஸின் ரத்தம் உள்ளது. நாங்கள் ஒரு போதும் பா.ஜ.க.வுடன் சேர முடியாது. 3 எம்.எல்.ஏ.க்கள் எப்படியும் ஒரு அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என தெரிவித்தார்.