×

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறுபவர்கள் 46 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்தனர்... தாக்கரே தாக்கிய பட்னாவிஸ்
 

 

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறுபவர்கள் 46 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்தனர் என்று உத்தவ் தாக்கரேவை மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவடைந்தது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை முடித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குளிர்கால கூட்டத்தொடரில் குறைந்த நேரமே பங்கேற்ற  உத்தவ் தாக்கரேவை தேவேந்திர பட்னாவிஸ்  மறைமுகமாக தாக்கினார்.

தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது: ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று கூறுபவர்கள் 46 நிமிடங்கள் மட்டுமே அவையில் இருந்தனர். அவருடைய (ஆதித்யா தாக்கரே) தந்தைக்குக்கூட (உத்தவ் தாக்கரே) நாங்கள் பயப்படவில்லை. அவரது கட்சியை சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்களை மூக்கின் கீழ் வைத்து மாநிலத்தில் ஆட்சி அமைத்தோம். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய  முடியவில்லை.

மும்பை பற்றி எரியும் என்று அவர் (உத்தவ் தாக்கரே) கூறினார் ஆனால் ஒரு தீப்பெட்டி கூட எரிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும், எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தாக்கரே, 32 வயது இளைஞனை பார்த்து அதாவது தன்னை பார்த்து மகாராஷ்டிரா அரசு பயப்படுகிறது தெரிவித்து இருந்தார். அதற்கு உங்களை பார்த்து அல்லது உங்க அப்பாவை பார்த்துக்கூட பா.ஜ.க பயப்படவில்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.