×

ஓபிஎஸ் வீட்டில் குடுமிப்பிடி சண்டை - போலீஸார் விசாரணை

 

 முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நடந்த குடுமிப்பிடி சண்டை கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதை அடுத்து அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.  தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலால் ஆங்காங்கே உட்கட்சி மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

 அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக மகளிர் அணி துணை செயலாளர் கனகலட்சுமி நேற்று மாலையில் தனது ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வத்தை சந்திக்க கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்.     அப்போது அதிமுக விருகம்பாக்கம் மகளிர் அணி துணைச் செயலாளர் ஷகிலாவும் மதுரவாயலைச் சேர்ந்த அதிமுக மாவட்ட துணைத்தலைவர் மஞ்சுளாவும் கனக லட்சுமியையையும் அவரது ஆதரவாளர்களையும் தடுத்ததாக தெரிகிறது.

 இதனால் இரு அணிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.   ஒரு கட்டத்தில் முற்றிப் போகவே இரு தரப்பினரும் மாறி மாறி முடியை பிடித்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

 இந்த குடுமிப்பிடி சண்டையால் ஆவேசமடைந்த கனகலட்சுமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.   இந்த புகாரை அடுத்து அபிராமபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.