×

மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் கைதா?

 

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டின் முன்பாக அதிமுகவினர் திரண்டனர். நள்ளிரவில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது திமுகவில் பழிவாங்கும் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

 இந்த நிலையில் நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது செய்யப்பட உள்ளதாக ஒரு தகவல் பரவியது .   சமீபத்தில் நடந்த கட்சி கூட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தும் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகின்றார் சி.வி. சண்முகம். 
இந்த நிலையில் விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதும்,  அவர் திமுகவையும் முதல்வரையும் கடுமையாக விமர்சித்தார். இதன் பின்னர் தான் அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். 

 இந்த நிலையில் நள்ளிரவில் சி.வி. சண்முகம் போலீசாரால் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் பரவியதையடுத்து திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீடு முன்பாக அதிமுகவினர்  குவிந்தனர்.  இதனால் சிவி சண்முகம் வீடு உள்ள பகுதியில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து நள்ளிரவில் சென்னையில் இருந்து திண்டிவனம் வீட்டுக்கு சென்ற சி.வி.சண்முகம் , அங்கிருந்த கட்சியினரிடம் தன்னை கைது செய்தாலும் பரவாயில்லை. என்றைக்காவது ஒருநாள் கைது செய்யப் போகிறார்கள்.   அது இன்றைக்கே நடக்கட்டும்.  அதனால் அதைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.  இதன் பின்னரே கட்சி தொண்டர்கள் கலைந்து சென்றனர்.