எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையில் உள்ள வார்த்தைகள் அவர்களின் செயல்களுக்கு மாறானது.. பா.ஜ.க. பதிலடி
எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கையில் பயன்படுத்தி உள்ள வார்த்தைகள் அவர்களின் செயல்களுக்கு மாறானது என பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
நம் நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு சம்பவங்கள், சமீபகாலமாக நடந்து வரும் வகுப்புவாத வன்முறை தொடர்பாக தங்களது கவலை மற்றும் வகுப்புவாத வன்முறையில் ஈடுபவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், மத கலவரங்கள் தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த 13 தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். மேலும் அந்த அறிக்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணுமாறு மக்களை வலியுறுத்தி இருந்தனர். எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டறிக்கைக்கு பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது. பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:
கூட்டறிக்கையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கையெழுத்திட்டுள்ளார். ஆனால் மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் வன்முறை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அதேவேளையில், தீக்குளிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத்தான் இது போன்ற இரட்டைத்தன்மை காட்டுகிறது. கூட்டறிக்கை போலியானது. கரௌலி வன்முறையில் முக்கிய குற்றவாளியான மத்லுப் அகமதுவை பிடிக்க தவறிய அசோக் கெலாட் (ராஜஸ்தான் முதல்வர்) குறித்து சோனியா காந்தி மௌனம் சாதித்ததற்காக சோனியா காந்தியிடம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர் (குற்றவாளி மத்லுப் அகமது) ஏன் 14 நாட்களாக தலைமறைவாக இருக்கிறார்? கலவரக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்கள் கோரிக்கை கோருகிறது. ஆனால் கரௌலியில் இது நடக்கவில்லை. நீங்கள் திருப்திப்படுத்தும் அரசியலை செய்ய விரும்புவதால் அதை செய்யவில்லையா? கூட்டறிக்கையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு எதிரானது உங்கள் செயல்கள். நீங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் சட்டவிரோத சொத்துக்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. ஆனால் இது வெறுப்பின் புல்டோசர் என்று ராகுல் காந்தி கூறினார். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கலவரக்காரர்களுடன் நின்று சீருடையில் இருப்பவர்களின் மன உறுதியை உடைக்கிறீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.