×

தேசதுரோக சட்ட விவகாரம்.. காங்கிரஸ் கட்சியின் வரலாற்று தவறுகளை சரி செய்ய மோடி அரசு முயற்சிக்கிறது.. பா.ஜ.க.

 

தேசதுரோக சட்ட விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் வரலாற்று தவறுகளை சரி செய்ய மோடி அரசு முயற்சிக்கிறது என பா.ஜ.க.வின் கவுரவ் பாட்டியா தெரிவித்தார். 

காலனித்துவ காலச் சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேசத் துரோக சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி டிவிட்டரில், உண்மையை சொல்வது தேசபக்தி, தேசதுரோகம் அல்ல. உண்மையை சொல்வது தேசத்தின் மீதான அன்பு, தேசத்துரோகம் அல்ல. உண்மையை கேட்பது ராஜதர்மம். உண்மையை நசுக்குவது ஆணவம். பயப்பட வேண்டாம் என பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் நாட்டில் தேசதுரோக சட்டத்தை அதிகம் தவறாக பயன்படுத்திய காங்கிரஸ்தான் என பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.  பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டி வருகிறது. 

இந்திய தண்டனை சட்டத்தின் 124ஏ பிரிவை மறுஆய்வு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இவ்வாறு செய்ய, காங்கிரஸின் 55 ஆண்டுகள் ஆட்சி உள்பட கடந்த 75 ஆண்டுகளில் இதுபோன்ற மன உறுதியை எந்த அரசும் காட்டவில்லை. குடிமக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை மோடி அரசு வெளிப்படுத்துகிறது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுத்து காங்கிரஸ் கட்சியின் வரலாற்று தவறுகளை சரி செய்ய அரசு முயற்சிக்கிறது. இதுவும் (தேசதுரோக சட்டம்) காங்கிரஸால் பிழையாக இருந்த 370வது சட்டப்பிரிவை மோடி அரசு திருத்தியது போலத்தான். 

ஹனுமன் கீர்த்தனைகளை பாட முயன்றதற்காக மகாராஷ்டிரா அரசு மக்கள் (ரானா தம்பதியினர்) மீது தேசத்துரோக சட்டத்தை போட்டுள்ளது என்ற அட்டர்னி ஜெனரலின் வாதமும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடங்கும். இது சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை காட்டுகிறது. ஆட்சிக்கு வந்தால் தேசத்துரோக சட்டத்தை ரத்து செய்வோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனால் மகாராஷ்டிராவில் ஹனுமன் கீர்த்தனையை பாட முயற்சித்தபோது, இந்த சட்டத்தை திணிக்கிறது. ராஜஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இந்த சட்டத்தை காங்கிரஸ் பயன்படுத்தியது. சத்தீஸ்கரில் மின்வெட்டு குறித்து அரசாங்கத்தை கேள்வி எழுப்பிய ஒருவருக்கு எதிராகவும் தேசதுரோக வழக்கு பாய்ந்தது. நாட்டில் தேசத்துரோக சட்டத்தை காங்கிரஸ்தான் தவறாக அதிகம் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.