×

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை.. ராஜாக்கள் கூட அதை செய்ய மாட்டார்கள்.. குலாம் நபி ஆசாத் 

 

போர்களில் கூட, மன்னர்கள் பெண்கள் தாக்கப்படக்கூடாது என்று உத்தரவிட்டனர் ஆகையால் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என்று குலாம் நபி ஆசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில்,  காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். மூன்றாவது முறையாக நேற்று சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். டெல்லியில்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

அப்போது குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்தியிடம் ஏற்கனவே 50 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தும் முன் அமலாக்கத்துறை அவரது வயது மற்றும் உடல்நிலையை மனதில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர் வயதாகி விட்டார், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், விசாரணை அமைப்புகளின் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. 

போர்களில் கூட, மன்னர்கள் பெண்கள் தாக்கப்படக்கூடாது, உடல்நிலை சரியில்லாதவர்களை விட்டுவிட வேண்டும் என்று உத்தரவுகளை வழங்கினர். வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். சோனியா காந்தியை இதுபோன்ற ஏஜென்சிகளுக்கு உட்படுத்துவது சரியல்ல என்பதால் இதை மனதில் கொள்ளுமாறு நான் அரசாங்கத்தையும், அமலாக்கத்துறையையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.