×

பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மற்றும் கடவுளின் எதிரிகள்.. காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்

 

பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், மக்கள் மற்றும் கடவுளின் எதிரிகள் என்று கோவா பார்வர்ட் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் தெரிவித்தார்.

கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் பா.ஜ.க.வில் இணைந்தது குறித்து, காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்ட் கட்சியின் தலைவரும், அந்த கட்சியின் ஒரே எம்.எல்.ஏ.வுமான விஜய் சர்தேசாய் கூறியதாவது: பா.ஜ.க.வுக்கு தாவ முடிவு செய்த அந்த எம்.எல்.ஏ.க்கள்,  அனைத்து அரசியல் உரிமை, அடிப்படை கண்ணியம், நேர்மை ஆகியவற்றுக்கு எதிராக, செல்வத்தின் மீதான பேராசை மற்றும் பதவிக்கான பசியை தொடர இன்று தூய தீமையின் அடையாளமாக நிற்கிறார்கள். கோவா மக்கள் முதுகில் குத்தப்பட்டதாக உணருவார்கள்.

ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. வஞ்சகத்தையும் சூழ்ச்சியையும் பயன்படுத்துகிறது. எம்.எல்.ஏ.க்கள் தங்களை கால்நடைகளை போல விலைக்கு வாங்க அனுமதித்தனர். பொதுமக்கள் இந்த துரோகிகளை நிராகரிக்க,  அவர்கள் மக்களுக்கும், கடவுளுக்கும் எதிரிகள் என்று முத்திரை குத்த வேண்டும். அரசியல் விலகல் என்பது மக்களின் ஆணைக்கு துரோகம் இழைப்பது மட்டுமல்ல, கடவுளை இழிவுபடுத்துவதும்  கேலி செய்வதும் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவா சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், நேற்று காலையில் அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகரை திகம்பர் காமத் உள்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8  பேர் சந்தித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கோவா பா.ஜ.க. தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே அவர்கள் பா.ஜ.க.வில் இணைவதாக தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அது நடந்து முடிந்தது.