×

ஆளுநர் வைத்த பொங்கல்! புறக்கணித்த திமுக

 

 ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் இடையே தமிழ்நாடு என்கிற வார்த்தை மோதல் நடந்து வருவதால் ஆளுநர் வைத்த பொங்கல் திருவிழாவை திமுகவினர் புறக்கணித்துள்ளனர்.   முதல்வர் ஸ்டாலின்,   அமைச்சர்கள்,  திமுக எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த விழாவை புறக்கணித்துள்ளனர்.

 சென்னை ஆளுநர் மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.   முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் , ஆதீனங்கள்,  கிறிஸ்துவ பிசப்புகள் , முஸ்லிம் மத குருமார்கள், விவசாயிகள் என்று 1800க்கும் மேற்பட்டோருக்கு  அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தன.  

ஆளுநர் மாளிகையில் கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட  தமிழகத்தின் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நடந்தது.  இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அன்பழகன், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், ஓ. எஸ். மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம்,  அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் விழாவில் பங்கேற்றனர்.  பாஜகவின் சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.  

திமுக சார்பில் முதல்வரோ,  அமைச்சர்களோ,  எம்பி மற்றும் எம்எல்ஏக்களோ யாரும் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.  

 தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று சொல்வது சரியானது என்று ஆளுநர் சொன்னதை அடுத்து திமுக இந்த விவகாரத்தை பெரிதாக கையில் எடுத்தது. இதனால் சட்டமன்றத்தில் உரையாற்றிய போதும் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார் ஆளுநர்.  இதற்கு திமுக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது.  உடனே ஆளுநர் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்தார்.   மேலும் தமிழக லட்சினை தவிர்த்து தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக இந்திய அரசு என்று இந்திய அரசின் லட்சினை  வைத்து அழைப்பு விடுத்திருந்தார்.   இதனால் திமுகவினர் ஆளுநர் நடத்திய இந்த பொங்கல் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.