×

ஓபிஎஸ்க்கு பச்சைக்கொடி - விரைவில் டெல்லி செல்கிறார்
 

 

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கும் பழனிச்சாமிக்கும் இன்னும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.   இருவருக்கும் இடையேயும் அதிகார போட்டி நீடித்துக் கொண்டே செல்கிறது.  இந்த நிலையில் டெல்லியில் பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த பன்னீர் செல்வத்திற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் இதை அடுத்து அவர் விரைவில் டெல்லி செல்ல இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.

 பன்னீர் செல்வத்தின் இந்த டெல்லி விசிட்டுக்கு பின்னர் அதிமுகவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றைத்தலைமை விவகாரத்தால் அதிமுக பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை  நீக்கிவிட்டு பழனிச்சாமி கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழுவை கூட்டி தன்னை  இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார்.  இதை அடுத்து தன்னை நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில்,  பழனிச்சாமி நடத்திய பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் தீர்ப்பு வராமல் இருக்கிறது.

 இதற்கிடையில் டெல்லியில் பிரதமர் மோடி,  உள்துறை அமைச்சர் அமித்ஷா , பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவரை சந்தித்து ஆலோசனை நடத்த நேரம் கேட்டிருக்கிறார்  பன்னீர்செல்வம்.  அதற்கு பச்சை கொடி காட்டப்பட்டு இருப்பதாக தகவல் .  இதனால் விரைவில் அநேகமாக இம்மாத இறுதியில் பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவிருக்கிறார் என்றும்,  அந்த டெல்லி பயணத்தில் மோடி , அமித்ஷா, நட்டா  உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. பன்னீர் செல்வத்தின் இந்த டெல்லி விசிட்டுக்கு பின்னர் அதிமுகவில் ஒரு புயலே அடிக்கும் என்று கூறப்படுகிறது.