×

எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கி ஜனநாயகத்தை கொல்ல பா.ஜ.க. விரும்புகிறது.. குஜராத் காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் நியமனம் தொடர்பான தங்களது விண்ணப்பத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாததை குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கி ஜனநாயகத்தை கொல்ல பா.ஜ.க. விரும்புகிறது என்று அம்மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவையில் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் கட்சியான பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவுக்கு 156 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. பா.ஜ.க.வுக்கு கடும்  போட்டியாளராக கருதப்பட்ட காங்கிரஸ் 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. குஜராத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆம் ஆத்மி 5 தொகுதிகளை வசப்படுத்தியது. சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

பா.ஜ.க. பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் கைப்பற்றியதால் சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விதிகளின்படி, புதிய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10 சதவீத எம்.எல்.ஏ.க்களை ஒரு கட்சி வைத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 1 இடம் குறைவாக உள்ளது. இருப்பினும் தங்கள் கட்சியின் சட்டப்பேரவை தலைவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் விண்ணப்பம் அளித்தது.

அந்த விண்ணப்பத்தில், விதிகளின்படி, எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் 2வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளதால், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸிலிருந்து தான் ஒருவர் தேர்வு செய்யப்படப் வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் சபாநாயகர் அந்த மனுவை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து, மாநிலத்தில் எதிர்க்கட்சி இருப்பதை சபாநாயகர் விரும்பவில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் குரலை முடக்கி ஜனநாயகத்தை கொல்ல பா.ஜ.க. விரும்புகிறது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.