×

தேர்தல் தேதி அறிவிப்பு... விரைவில் ராகுல் ஜி காங்கிரஸ் தலைவராக வருவார்... ஹரிஷ் ராவத் உறுதி
 

 

விரைவில் ராகுல் ஜி காங்கிரஸ் தலைவராக வருவார் என்று ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணைக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, காங்கிரஸ் தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 22ம் தேதி வெளியாகும். அந்த மாதம் 24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 8ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

இந்நிலையில், விரைவில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வருவார் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார். இது தொடர்பாக ஹரிஷ் ராவத் கூறுகையில், விரைவில் ராகுல் ஜி காங்கிரஸ் தலைவராக வருவார். காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும். என்று கட்சி தொண்டர்கள் அனைவரும் நம்புகிறோம், கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு பொறுப்பேற்று அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி பதவி விலகினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதத்தில் பதவி விலகுவதாக சோனியா காந்தி தெரிவித்தார் ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி அவரை தொடர்ந்து பதவி வகிக்கும்படி கோரியது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக சோனியா காந்தி தெரிவித்தார்.