தமிழக மக்களுக்கு வணக்கம்.. அந்த ஆடியோவை நான் வெளியிடவில்லை - காயத்ரி ரகுராம்
ஆரம்பத்தில் இருந்தே அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்திருக்கிறது. அது சூர்யா சிவா- டெய்சி சரண் விவகாரத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது. அண்ணாமலை உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் தாங்கள் போடும் பதிவுகளுக்கு லைக் போடுவதற்கு பணம் கொடுத்து ஆள் செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள் என்று போட்டு உடைத்து விட்டார் காயத்ரி ரகுராம். இது பாஜகவின் மூத்த நிர்வாகிகளை சீற்றம் அடைய வைத்திருக்கிறது.
இந்த நிலையில் டெய்சி சரண் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, இப்படிப்பட்ட ஆட்களுக்கு எல்லாம் தலைமை மாநில பொறுப்பு வழங்கி இருக்கிறது என்று சூர்யா சிவாவை விமர்சித்து இருந்தார். அதே நேரம் தலைமையை கண்டித்திருந்தார். இந்த நிலையில் தான் காயத்ரி ரகுராமை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார் அண்ணாமலை .
கட்சியை விட்டு நீக்கியது முதல் தொடர்ந்து காயத்ரி ரகுராம் புலம்பி வருகிறார். ’’பொய் சொல்பவரை கடவுள் விடமாட்டார். பிறர் வாழ்வில் விளையாடும் எவரையும் கடவுள் விடமாட்டார். ஒரு நாள் உண்மை வெளிவரும், அப்படித்தான் தண்டிக்கப்படுவீர்கள். விரைவில் அல்லது பின்னர் அது நடக்கும். பொய் சொல்லி ஒருவரை சீரழிப்பவர்கள், உண்மையை அறியாமல், வதந்தியை ஆதரிப்பதும் அதர்மமாகும். நீங்கள் ஒரு இந்துவாக இருந்தாலும் சரி, சிறந்த தலைவராக இருந்தாலும் சரி, பெரிய துறவியாக இருந்தாலும் சரி பொய்கள் எப்போதும் தோல்வியடையும். உண்மை தெரியாமல் வதந்தி பரப்புவோரை கடவுள் நிச்சயம் தண்டிப்பார். குற்றவாளி விரைவில் வெளியே வருவார். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
உங்கள் தலைமையையும் பதவியையும் காப்பாற்ற 100 பொய்களைச் சொல்லலாம். ஆனால் ஒரு உண்மை உங்கள் 100 பொய்களை அழித்துவிடும். தலைவனாக சித்தரிக்கும் முன் மனிதனாக இரு.
இந்த பொய்களால் என் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதை என் குடும்பம் ஏற்காது. என் குடும்பத்திற்கு இது அநீதி’’ என்கிறார்.
திருச்சி சிவா ஆடியோ விவகாரத்தில் அந்த ஆடியோவை வெளியே கசிய விட்டது காயத்ரி ரகுராம் தான் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை மறுத்து அவர் ஒரு கடிதம் வெளியிட்டிருக்கிறார் அந்த கடிதத்தில், ‘’தமிழக மக்களுக்கு வணக்கம். நான் சில நேர்காணல்களை பார்த்தேன். நான் திருச்சி சூர்யா ஆடியோவை கசிய விட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படி சொல்லச் சொன்னார்களா? அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் முதலில் உரையாடலை பதிவு செய்தவர் நான் அல்ல.
அதேபோல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை. பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை எதிர்காலத்திற்கு முன்பு பெற்று உரையாடலை கேட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவும் கூறினார். மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்பதை அண்ணாமலை ஜி கண்டுபிடிப்பது எளிது.
சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தி வருகின்றனர். அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்து உள்ளேன். திருச்சி சூர்யா ஆடியோவை மீடியாக்களுக்கு கசிய விட்டது யார் என்பதை கண்டுபிடித்து அந்த நபர் மீது மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார் என நான் இறுதியாக நம்புகிறேன். உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உணர்வுபூர்வமாக ஆதரவு அளித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. தமிழ்நாடு மக்களின் அதீத அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்’’என்று கூறியிருக்கிறார்.