×

பா.ஜ.க.வில் இணைந்த இமாச்சல பிரதேச ஆம் ஆத்மி கட்சி தலைவர், பொதுச் செயலாளர்.. கெஜ்ரிவால் கட்சிக்கு பின்னடைவு

 

இமாச்சல பிரதேச ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் உள்பட அந்த கட்சியின் 3 முக்கிய தலைவர்கள் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தனர். 

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து, கடந்த புதன்கிழமையன்று  மான்டியில் ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் கலந்து கொண்டனர். அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், முதலில் டெல்லியில் ஊழலை ஒழித்தோம். பிறகு பஞ்சாபில் ஊழலை ஒழித்தோம். இப்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஊழலை ஒழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைமை தங்களை புறக்கணித்ததாக குற்றம் சாட்டி, இமாச்சல பிரதேச ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உனா மாவட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் இக்பால் சிங் ஆகியோர் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, இமாச்சல பிரதேச பா.ஜ.க. தலைவர் அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். அனுப் கேசரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:  இமாச்சல பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சிக்காக நாங்கள் 24 மணி நேரமும் மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்தோம். 

இருப்பினும் அரவிந்த் கெஜ்ரிவால் மாண்டியில் பேரணி மற்றும் ஊர்வலத்தில் மாநில கட்சி தொண்டர்களை புறக்கணித்தார். அவரால் நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். கட்சிக்காக இரவும் பகலும் உழைக்கும் எங்களை அவர் பார்க்க கூட  இல்லை. மாண்டியில் நடந்த பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த்த மான் ஆகியோர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். சதீஷ் தாக்கூர் பேசுகையில், கடந்த 6ம் தேதி நடந்த சாலை பேரணியின் போது நாங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், புறக்கணிக்கப்பட்டதாகவும் உணர்ந்தோம். எனவே பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் செயல்படவும், இமாச்சல பிரதேச மக்களுக்கு சேவை செய்யவும் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்தோம் என தெரிவித்தார்.