×

காங்கிரஸ் திசையில்லாத, தலைமையற்றதாக மாறி விட்டது... பா.ஜ.க.வில் இணைந்த இமாச்சல பிரதேச காங்கிரஸின் செயல் தலைவர்

 

இமாச்சல பிரதேச காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹார்ஷ் மகாஜன் நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் இணைந்தார். இது அம்மாநில காங்கிரஸூக்கு பெரிய அடியாக கருதப்படுகிறது.

இமாச்சல பிரதேச காங்கிரஸூக்கு பெரும் அடி விழுந்துள்ளது. இமாச்சல பிரதேச காங்கிரஸ் செயல் தலைவரும், அந்த கட்சியில் 45 ஆண்டுகள் இருந்தவருமான ஹார்ஷ் மகாஜன் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் பா.ஜ.க. இணைந்தார். ஹார்ஷ் மகாஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: நான் 45 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்தேன். இன்று காங்கிரஸ் திசையில்லாத, தலைமையற்றதாக மாறி விட்டது. 

தொலைநோக்கு பார்வையோ அல்லது அடிமட்ட தொண்டர்களோ இல்லை. டெல்லியை போல் இமாச்சல பிரதேச காங்கிரஸிலும் அம்மா-மகன் ஆட்சி உள்ளது. மறைந்த, முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் இப்போது மாநில காங்கிரஸ் தலைவராகவும், அவர்களது மகன் விக்ரமாதித்ய சிங் கட்சி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளனர்.  முன்னாள் முதல்வரின் மறைவுக்கு பிறகு காங்கிரஸில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாஜனை பா.ஜ.க.வுக்கு வரவேற்ற மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசுகையில், ஹார்ஷ் மகாஜன் காங்கிரஸில் முக்கியமான பதவிகளை வகித்தவர் மற்றும் ஒரு சுத்தமான இமேஜை  தக்க வைத்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்து மாநிலத்தில் வரலாற்றை எழுதும். மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரும் என தெரிவித்தார்.