×

ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த அரசியல் ஸ்டார்ட்அப்.. அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா

 

ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த அரசியல் ஸ்டார்ட்அப் என்று அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சனம் செய்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதலில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தை அமைத்தது. இமாச்சல பிரதேசத்தில் தடம் பதிக்கும் நோக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தது. மேலும், எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி கட்சி சவாலாக விளங்கும் என கூறப்படுவதை பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அசாம் முதல்வருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மா மறுத்துள்ளார். இது தொடர்பாக ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த அரசியல் ஸ்டார்ட்அப். கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் தாண்டிய பிறகும் குறு சிறு நடுத்தர நிறுவனமாக கூட மாற தவறிவிட்டது. 10 ஆண்டுகளாக அவர்கள் டெலிவரிக்கான எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரே தயாரிப்பை விற்க முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடந்த தினங்களுக்கு முன், காங்கிரஸின் உள்கட்சி தேர்தல் எனப்படும் தேர்தலில், வாக்கு எண்ணிக்கை முன்பே முடிவு தெரிந்து அறிவிக்கப்பட்டது. சசி தரூருக்கு வாக்களித்து தைரியத்தை வெளிப்படுத்திய 1,000 பிரதிநிதிகள் மட்டுமே காங்கிரஸில் உள்ள ஒரே ஜனநாயக மக்கள். அவர்கள் விரைவில் பா.ஜ.க.வில் இணைவார்கள் என தெரிவித்து இருந்தார். இது காங்கிரஸ் கட்சியில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.