×

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடுவில் என்னை அமலாக்கத்துறை அழைப்பது சரியானதா?... மாநிலங்களவையில் கார்கே ஆவேசம்

 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடுவில் என்னை அமலாக்கத்துறை அழைப்பது சரியானதா? என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி எழுப்பினார்.

நேஷனல் ஹெரால்டு தொடர்பான பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு  அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது சரியா என்று மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன் கார்கே கேள்வி எழுப்பினார். 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று காலையில் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பேசுகையில் கூறியதாவது: நான் மதியம் 12.30 மணிக்கு அமலாக்கத்துறை முன் ஆஜராக வேண்டும். நான் சட்டத்தை பின்பற்ற விரும்புகிறேன். ஆனால் இந்த நேரத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடுவில் என்னை அழைப்பது சரியானதா?. நேற்று (நேற்று முன்தினம்) சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வீடுகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜனநாயகம் வாழுமா?, அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட முடியுமா?. நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் இதை எதிர்த்து போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். யங் இந்தியா நிறுவனத்தில் சோனியா மற்றும் ராகுல் காந்தி பங்குதாரர்கள். நேற்று முன்தினம் ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களது வீடுகளுக்கான சாலைகளை போலீசார் சீல் வைத்தனர்.