×

நான் அரசியலில் இருந்து விலக தயார்! பிடிஆர் தயாரா? செல்லூர் ராஜூ போட்ட சவால்

 

அரசியலில் இருந்து விலக தயார்  என்று செல்லூர் ராஜு தடாலடியாக அறிவித்திருக்கிறார்.   நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று அறிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. 

 முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 29ஆம் தேதி அன்று மதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.  இதற்கான முன்னேற்பாடுகளை கவனித்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.  

 இந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன்,  கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.  இந்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,   கடந்த ஆட்சியில் கூட்டுறவு துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்ன குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் , நான் அரசியலில் இருந்து நிச்சயமாக விலக தயார். அதே நேரம்,  கூட்டுறவு துறையில் இருந்து முறைகேடு நிரூபிக்கப்படவில்லை என்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலகிக் கொள்ள தயாரா என்று சவால் விட்டார்.

 அவர் மேலும்,  கூட்டுறவு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக அதிமுக ஆட்சியில் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் பெற்றிருக்கிறோம்.   அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ஊழல் நடந்துள்ளது என்று நிரூபிக்க தயாராக இருக்க வேண்டும் நிதி அமைச்சர்.    தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்திருக்கிறார்கள் என்று கடுமையாக சாடினார்.