×

அவன் கையை வெட்டுவேன் - டி.ஆர்.பாலு எம்பி சர்ச்சை பேச்சு
 

 

திமுகவின் மூத்த நிர்வாகிகளும் , அக்கட்சியின் பேச்சாளர்களும் தொடர்ந்து மேடைகளில் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது .  இந்த நிலையில் திமுகவின் மூத்த நிர்வாகியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக பேசி இருக்கிறார்.

 மதுரையில் நடந்த திறந்த வெளி மாநாட்டில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர். பாலு பங்கேற்று பேசினார்.   அப்போது,   ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை.   சேது சமுத்திர சட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே இது போன்ற கட்டுக் கதைகளை சொல்லி வருகின்றார்கள் . இந்தத் திட்டத்தினை தடுத்து நிறுத்தியவர்கள் எல்லோரும் பாவிகள் என்றார்.

 தொடர்ந்து பேசிய டி. ஆர். பாலு,    யாராவது உங்களை சீண்டினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது . ஆனால் என்னால் முடியும்.  ஏனென்றால் உங்களுக்கு பலம் கிடையாது. எனக்கு பலம் உண்டு. அதனால் நான் திருப்பி அடிப்பேன்.  என் கட்சித் தலைவரை சீண்டினாலோ எவனாவது ஒருவன் ஐயா வீரமணியின் மீது கை வைத்தாலோ அவன் கையை வெட்டுவேன்.  இதுதான் என் தர்மம் .  அவன் கையை வெட்டுவது தான் என் நியாயம்.  இது நியாயம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்தில் போய் சொல்லுங்கள் . ஆனால் அதற்கு முன்பே அவன் கையை வெட்டி விடுவேன்.  நீங்கள் எல்லாம் முறைப்பதை பார்த்தால் நாளைக்கே போட்டுக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறது.  அவரை நாவடக்கத்துடன் பேச சொல்லுங்கள் என்று சொல்வீர்கள்.  சொன்னால் சொல்லிக் கொள்ளுங்கள் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.