டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன்; இதற்காகத்தான் தர்மயுத்தம்.. - ஓபிஎஸ் பரபரப்பு
டிடிவி தினகரனை சந்தித்து பேசு வேன் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஓபிஎஸ். மேலும், தற்போது எதற்காக தர்மயுத்தம் நடக்கிறது என்பது விளக்கம் அளித்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் காலமானார். தஞ்சாவூரை சேர்ந்த அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓபிஎஸ் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று திருச்சி சென்றார்.
திருச்சி விமான நிலையத்தில் ஓபிஎஸ்ஐ செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது, அதிமுக பிரச்சனை குறித்த கேள்விக்கு, அதிமுக எப்போதும் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இருந்திருக்கிறது. எந்த நேரத்திலும் தொண்டர்களை பிளவு படுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது அதிமுக என்றார்.
தொடர்ந்து அதுகுறித்து பேசிய ஒபிஎஸ், அதிமுகவில் எந்தவித சிறு சேதமும் இல்லை. சிறு சிறு பிரச்சனைகள் இடையில் வரும் அது சரியாகிவிடும். தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். அதிமுக தலைமையில் தான் பிரச்சனை என்கிற மாயத் தோற்றம் உருவாகி இருக்கிறது. அதுவும் போக போக சரியாகிவிடும் என்று சொன்ன ஓபிஎஸ்,
அதிமுகவில் இந்த மோதல் -பிளவுக்கு பாஜக காரணமா? அதிமுகவின் இடத்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறதா? என்ற கேள்விக்கு, அதிமுகவின் ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. யாராலும் அதிமுகவை மிரட்டவும் முடியாது. அதிமுக தொண்டர்களை பிளவுபடுத்தவும் முடியாது. அது நடக்கவும் நடக்காது. அதிமுகவின் இடத்தை பாஜக பிடிக்கப் பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக வரும் பிரதமர் மோடியை சந்திக்கிறீர்களா ?என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம் என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார் என்று சொல்லி இருக்கிறாரே டிடிவி தினகரன். அவரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, டிடிவி தினகரன் கருத்து நல்ல கருத்து. அதை வரவேற்கிறோம். தஞ்சாவூரில் அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் சந்தித்து பேசுவேன் என்றார்.
தற்போது நடைபெறும் தர்மயுத்தம் எதற்காக? என்ற கேள்விக்கு, எங்கள் பாதை எம்ஜிஆர் காட்டிய பாதை. அதில் நாங்கள் பயணிக்கிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக சட்டவிதிகளை எம்ஜிஆர் உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விடக்கூடாது. அதற்காகத்தான் தற்பொழுது தர்மயுத்தம் நடக்கிறது என்றார்.