×

உதயநிதி துணை முதல்வரா? கடுப்பான அமைச்சர் நேரு 
 

 

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவாக இருந்தபோது திமுகவின் மூத்த அமைச்சர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டு செய்தியாளர்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுக்க,  அவர்களும் மைக்கிற்கு முன்னால் எதுவும் சொல்ல முடியாமல்,  எதையாவது சொல்லி சமாளித்து வந்தனர்.

 தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக விட்டதால்,  அடுத்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று திமுக மூத்த அமைச்சர்களிடம் கேள்வி கேட்க,  சிலர் சமாளித்து பதில் சொல்கிறார்கள்.  அமைச்சர் நேருவோ  இந்த விவகாரத்தில் கடுப்பாகி,  ‘நகருங்க’ என்று சொல்லிவிட்டு காரில் சீறிப்பாய்ந்து விட்டார்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து,  நடைபெற்று வரும் நகராட்சி பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

 அதன் பின்னர்,  நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பியதும்,   அதெல்லாம் தேவையா என்று சொல்லிவிட்டு கடுப்பாகி காரில் ஏற முற்பட்டார்.  ஆனாலும் விடாமல் செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்ப,  நாடாளுமன்றத் தேர்தலில்  ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் வெற்றி  பெறும் என்று தெரிவித்தார்.  

 அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு குறித்த கேள்விக்கு,  அதுல என்ன சந்தேகம்.  அவர் நல்லா  செயல்படுகிறார்.  உதயநிதியின் செயல்பாடு அருமையாக உள்ளது என்று கூறினார். 

 தொடர்ந்து,  உதயநிதி ஸ்டாலினை துணை முதலைமைச்சராக மூத்த அமைச்சர்கள் முன்மொழிவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி அனுப்ப, கடுப்பான அமைச்சர் நேரு,   ’நகரங்க..’ என்று சத்தமாக சொல்லிவிட்டு காரின் கதவை வேகமாக திறந்து கொண்டு காருக்குள் ஏற,  கார் சீறிப்பாய்ந்தது.