பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? எம்.கி.எம். பல்டியால் பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான்
எம்.கி.எம். கட்சியின் திடீர் பல்டியால் இம்ரான் கான் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் இம்ரான்கான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இத்தீர்மானத்தின் மீது நாளை விவாதம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தங்களது பலத்தை காட்டும் விதமாக கடந்த இருபத்தி ஏழாம் தேதி அன்று இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். இப் பேரணியில் இம்ரான்கான், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து எதிர்க் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் உறவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இப்பேரணியில் பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு இம்ரான்கானையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த எம். கி.எம். கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டது. அக்கட்சி, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் இம்ரான கான் அரசு பெரும்பான்மையை இழந்தது. எம்.கி.எம். கட்சியின் அறிவிப்பால் எதிர் கட்சிகளின் பலம் 170 ஆக உயர்ந்துள்ளது. இம்ரான்கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாகவே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பான்மையை இழந்து உள்ளதால் இம்ரான்கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.