×

இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே? பாஜக

 

ரத்தம் கொதிக்கிறது. இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? என்று டிசம்பர் 26,2018 அன்று சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு தவறுதலாக ஹெச்ஐவி ரத்தம் செலுத்திய விவாகரத்தில் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார் என்று சொல்லும் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.


 
அவர் மேலும்,  இன்றைய  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்  கொளத்தூர் தொகுதியில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பிரியா என்ற 17 வயது சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தால் அந்த சிறுமியின் உயிர் பிரிந்து விட்டது. இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே? இது ஊழல் அரசு என்பதையும், உங்கள் ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனை எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதை விட உதாரணம் வேண்டியதில்லை என்பதையும் ஒப்பு கொள்கிறீர்களா முதல்வர் அவர்களே? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

அன்று அப்படி சொன்ன முதல்வர் இன்று மவுனமாக இருப்பதால்,   சொன்னது நீ தானா சொல் சொல் சொல்.....? என்று கேட்கிறார் நாராயணன் திருப்பதி.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா.  இவர் கால்பந்து வீராங்கனை பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு  மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு,  அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்திருக்கிறார். 

 மருத்துவரின் தவறான சிகிச்சையினால்  பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.   துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க  தனியாக விசாரணை குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.  

இந்த விவகாரம் பெரிதாக வெடித்திருக்கும் நிலையில்,  இப்போது ரத்தம் கொதிக்கவில்லையா ஸ்டாலின் அவர்களே? என்று கேட்கிறது பாஜக.