பொதுக்குழு நடத்தலாம் என்றெல்லாம் சொல்லவில்லை - வைத்திலிங்கம் விளக்கம்
உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டதால் எடப்பாடி தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர். இனி ஓபிஎஸ் என்ன நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மார்தட்டுகின்றனர்.
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் விளக்கம் அளித்திருக்கிறார் . அவர், ’’உச்ச நீதிமன்றத்தில் என்ன சொல்லி இருக்கிறார்கள்.. இந்த விவகாரம் பற்றி உயர்நீதிமன்றத்திற்கு போகலாம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். பொதுக்குழு நடத்தலாம் என்றெல்லாம் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. அதனால் நாங்கள் பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறோம் ’’என்கிறார்.
கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுக பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் எதையும் நிறைவேற்ற கூடாது என்று உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த எந்த தடையும் இல்லை. இதில் யாருக்கேனும் ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற தனி நீதிபதியை அணுகலாம் என்று உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.