இந்தியாவில் வலுவான உள்கட்சி ஜனநாயகம் மற்றும் சித்தாந்தம் கொண்ட ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க.தான்... ஜே.பி. நட்டா
இந்தியாவில் வலுவான உள்கட்சி ஜனநாயகம் மற்றும் சித்தாந்தம் கொண்ட ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க.தான் என்று அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
பா.ஜ.கட்சியின் தலைமை அலுவலகத்தில் 5ம் கட்ட பா.ஜ.க.வை அறிந்து கொள்ளுங்கள் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா, பராகுவே, நெதர்லாந்து, மெக்சிகோ, கொலம்பியா, எத்தியோப்பியோ, கம்போடியா, மாலத்தீவு மற்றும் மாலி ஆகிய நாடுகளின் தூதர்களுடன் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா கலந்துரையாடினார். அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:
இந்தியாவில் வலுவான உள்கட்சி ஜனநாயகம் மற்றும் சித்தாந்தம் கொண்ட ஒரே அரசியல் கட்சி பா.ஜ.க.தான். கட்சியில் தலைவர் முதல்வர் தேசிய தலைவர் வரையிலான அனைத்து பதவிகளும் கட்சிக்குள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதன் தொடக்கத்திலிருந்து அதன் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்யாத ஒரே அரசியல் அமைப்பு இது.
உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் உறவுகளை மேம்படுத்துவதை பா.ஜ.க. நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா மட்டுமின்றி பல நாடுகளை மாற்ற மத்திய அரசு கடுமையாக உழைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. அரசுகளின் சாதனைகளை குறிப்பிட்டார்.