×

பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி ஆசை இருந்ததில்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது... ஜே.பி. நட்டா

 

மகாராஷ்டிரா முதல்வராக சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுள்ளதை குறிப்பிட்டு, பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி ஆசை இருந்ததில்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று மாலை மகாராஷ்டிராவின் 20வது முதல்வராக சிவ சேனாவின் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார். மகாராஷ்டிரவின் முதல்வராக பதவியேற்ற ஏக்நாத் ஷிண்டேவுக்கும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸூக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜி.பி. நட்டா டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், ஏக்நாத் ஷிண்டே ஜி மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். பா.ஜ.க.வுக்கு முதல்வர் பதவி ஆசை இருந்ததில்லை என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. 2019 தேர்தலில் நரேந்திர மோடி ஜி மற்றும் தேவேந்திர ஜிக்கு தெளிவான ஆணை (தேர்தல் வெற்றி) கிடைத்தது.

முதல்வர் பதவியின் மீதான பேராசையில் உத்தவ் தாக்கரே எங்களை விட்டு வெளியேறி எதிர்க்கட்சிகளுடன்  இணைந்து ஆட்சி அமைத்தார். மகாராஷ்டிரா மக்களின் முன்னேற்றத்திற்காக ஏக்நாத் ஷிண்டே ஜியை ஆதரிக்க பா.ஜ.க. முடிவு செய்தது. தேவேந்திர பட்னாவிஸூம் பெரிய மனதுடன் அமைச்சரவையில் சேர முடிவு செய்துள்ளார், இது மகாராஷ்டிரா மக்கள் மீது அவருக்கு உள்ள பற்றுதலை காட்டுகிறது என பதிவு செய்துள்ளார்.