எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது காங்கிரசை வலுவிழக்கச் செய்வதல்ல.. ஜெய்ராம் ரமேஷ்
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது காங்கிரசை வலுவிழக்கச் செய்வதல்ல, வலுவான காங்கிரஸே எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு முக்கிய தூண் என்று காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
டெல்லியில் காங்கிரஸின் தலைமையகத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்திப்பை நடத்தினார். அப்போது ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்பது காங்கிரசை வலுவிழக்கச் செய்வதல்ல.நாங்கள் காங்கிரஸை வலுவிழக்க அனுமதிக்க மாட்டோம் என்பதை நமது கூட்டணி கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வோம். வலுவான காங்கிரஸே எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு முக்கிய தூண். ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்துக்கு கிடைத்த ஆதரவால் பா.ஜ.க. கதறுகிறது. இந்திய ஒற்றுமை பயணத்துக்கு பிறகு யானை எழுந்ததையும், யானை முன்னோக்கி நகர்வதையும், காங்கிரஸ் என்ன செய்கிறது என்பதை அனைத்து கட்சிகளும் பார்த்து கொண்டிருப்பதை அனைவரும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்திய ஒற்றுமை பயணம் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டது. ஆனால் அது எதிர்க்கட்சியில் ஒற்றுமை ஏற்படுத்தினால் அதை வரவேற்கிறோம். இந்திய ஒற்றுமை பயணம் மனதின் குரலாாக இருக்காது என்று நான் கூறியிருந்தேன் ஆனால் மக்களின் கவலைகளை பற்றியது. இது பா.ஜ.க.வுக்கும் கவலையாக இருக்குமாக என்று எனக்கு தெரியவில்லை, அவர்கள் பதறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.