×

இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பன்முகத்தன்மை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும்... மத்திய பா.ஜ.க. அரசை தாக்கிய காங்கிரஸ்

 

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ளதை குறிப்பிட்டு, இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பன்முகத்தன்மை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் தாக்கியுள்ளது.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் கடந்த சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக கட்சியின் நாடாளுமன்ற குழு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை நேற்று முன்தினம் தேர்வு செய்தது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும் என்பதை இதற்கு காரணம். இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர்  என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றார்.

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றது இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இங்கிலாந்திடம் இருந்து இந்தியா பன்முகத்தன்மை பற்றி கற்றுக் கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் தாக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவைர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்  நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: இங்கிலாந்திடம் இருந்து  பன்முகத்தன்மையை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா அதன் பன்முகத்தன்மை மற்றும் பன்முகத்தன்மைக்கு அதன் மரியாதைக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டது. கடந்த எட்டு ஆண்டுகளில் எல்லாமே மாறி விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில், சுனக்கின் தேர்விலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளும் என்றும், சிறுபான்மையினரை சேர்ந்த ஒருவரை உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் நடைமுறையை ஏற்கும் என்றும் நம்புகிறேன். முதலில் கமலா ஹாரிஸ் இப்போது ரிஷி சுனக். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவும் பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருப்பதாக நான் நினைக்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.