×

கூலிக்கு மாரடிக்கிற வேலையை ஜெயக்குமார் செய்யலாம்; நான் செய்யமாட்டேன்! - மருது அழகுராஜ் ஆவேசம்

 

ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால்,   ‘நதிகாக்கும் இரு கரைகள்’ என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்டது எனச்சொல்லி அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார் மருது அழகுராஜ்.   நமது அம்மா நாளிதழிலிருந்து நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ. பன்னீர் செல்வத்தை நீக்கி இருந்தார்கள் .  இதை அடுத்து மருது அழகுராஜ் நமது அம்மாவில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவரின் எழுத்தின் மூலமே அவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என்பது தெரிந்தது.   

அதே மாதிரி அவர், எடப்பாடிக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்தார்.  கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இன்னமும் அமைதியாக இருக்கிறார் என்று கொளுத்திப்போட்டார்.   பொதுக்குழு களேபரம் குறித்தும் கவலை தெரிவித்திருந்தார்.  கோடநாடு விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு .க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மருது அழகுராஜ்.

 இதற்கு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார்,   ’’ஓபிஎஸ் உடன் மருது அழகுராஜ் கைகோர்த்துக்கொண்டு வாங்கிய கூலிக்கு மாரடிக்கிறார் ’’என்று கடுமையாக சாடினார்.   அவர் மேலும்,  ‘’ நமது அம்மா பத்திரிகையில் முறைகேடு செய்து விட்டார் மருது அழகுராஜ்.   நமது எம்ஜிஆர் பத்திரிகையில் பொறுப்பாசிரியராக இருந்தபோது அங்கேயும் கையாடல் செய்துள்ளார் மருது அழகுராஜ்.  

 நமது அம்மா பத்திரிகை விளம்பர வருமானங்களை கணக்கில் வராமல்  எடுத்துக் கொண்டிருக்கிறார்  மருது அழகுராஜ்.  பாமக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தார்.   அதற்கான விளம்பரம் நமது அம்மா  நாளிதழில் வந்தது.  60 ஆயிரம் ரூபாய் கணக்கில் வரவில்லை .  இதன் காரணமாகத்தான் நமது அம்மாவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் மருது அழகுராஜ்.   

பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப்படுத்துகின்ற வகையில் அவர் நடந்து கொண்டிருக்கிறார்.   ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து  ஏன் மருது அழகுராஜ் கேட்கவில்லை? ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா பற்றி எதுவும் சொல்லாதது ஏன்? தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை ரவீந்திரநாத் எம்பி சந்தித்து புகழ்ந்து பேசியது ஏன்? இப்படி மருது அழகுராஜுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மருது அழகுராஜ்.  அவர்,  ‘’நமது எம்.ஆருக்கும் நமது அம்மாவுக்கும் 18 வருடங்கள் பணிபுரிந்துள்ளேன்.  என்னிடம் நேர்மை இல்லையென்றால் என்னிடம் ஏன் வர்றீங்க?  என்னிடம் நாணயம் இல்லையென்றால் ஏன் நமது அம்மாவுக்கு எடிட்டராக வரச்சொன்னீங்க?’’என்று ஆவேசப்பட்டவர்,  ‘’இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது புனித ஜார்ஜ் கோட்டையில் புதிய வரலாறு படைப்போம் என்று இபிஎஸ் ஒரு மடல் எழுதினார்.  அதை எழுதியது இந்த மருதுதான்.  தயவு கூர்ந்து சொல்கிறேன்.  கூலிக்கு மாரக்கிற வேலையை ஒருவேளை ஜெயக்குமார் செய்யலாம்.  ஆனால், நான் செய்ய மாட்டேன்’’என்றார் ஆவேசத்துடன்.