அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக எப்போதும் தலையிட்டதில்லை- ஜெயக்குமார்
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருந்தனர். பொதுக்குழுவை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார்.
பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார்..இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு ஓபிஎஸ் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஈ.பி.எஸ் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க கோரி தான் பாஜக மேலிடத் தலைவர்கள் வந்தார்கள். குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக எப்பொழுதும் தலையிட்டதில்லை எனக் கூறினார். ஒற்றை தலைமையஒ தேர்ந்தெடுப்பதற்காக தான் ஓபிஎஸ்யின் வீட்டில் பட்டாசு வெடிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்