×

நாங்களே உண்மையான அதிமுக; ஜி-20 மாநாட்டுக்கு ஈபிஎஸ்க்கு மட்டும் அழைப்பு- ஜெயக்குமார்

 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றது அணிகள் அல்ல பிணிகள் என ஓபிஎஸ் அணியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஆறாம் ஆண்டு நினைவு நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியில் பிளவு கிடையாது, பிரிவும் கிடையாது. ஓபிஎஸ் சார்ந்த சிலரை கட்சிகளிலிருந்து நீக்கியது. 75 தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பிரிந்து காணப்படுகிறது என்று எப்படி கூற முடியும்? கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதனால் அவர்களை கட்சியில் இருந்து நீக்கி உள்ளோம். அப்படி நீக்கப்பட்டவர்கள் ஏதோ நான்கு பேரை கொண்டு வந்து அம்மாவுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினால் அது எப்படி சரியாக இருக்கும்? அது அணிகள் அல்ல பிணிகள்.

அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகளால் கொடுக்கப்பட்ட பொறுப்பு தான் இடைக்கால பொதுச்செயலாளர். அதன் அடிப்படையில் தான் ஜி-20 மாநாட்டுக்கு அண்ணன் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொது பொதுச்செயலாளர் என அழைப்பிதழில் குறிப்பிட்டு ஒன்றிய அரசிடம் இருந்து அழைப்பிதழ் வந்துள்ளது” என தெரிவித்தார்.