×

கட்சியினரிடையே குழப்பத்தை உருவாக்க சசிகலா முயற்சி - ஜெயக்குமார்

 

அதிமுகவின் கொடியையும் பொதுச் செயலாளர் என்ற பதவிப் பெயரையும் சசிகலா பயன்படுத்துவது குறித்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒன்றேகால் மணி நேரம் நேரடி வாக்குமூலம் அளித்ததாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சட்டத்தை மதிக்காமல், கடந்த ஆண்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கு சென்று கல்வெட்டை திறந்து, கழக கொடியை ஏற்றியது தொடர்பாக சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்  இதுகுறித்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜனவரி மாதம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிமுகவின் கொடியை தவறாக பயன்படுத்துவது, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை சசிகலா பயன்படுத்தியது ஆகிய செயல்களால், கட்சியினரிடையே ஒருவிதமான குழப்பத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார் என்று காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கில் இன்று நேரடியாக ஆஜராகி, சசிகலாவின் நடவடிக்கை குறித்து வாக்குமூலம் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தான் தலைமை என்று உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், என அனைத்தும் கூறியுள்ள நிலையில் சசிகலா வேண்டுமென்றே அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முயற்சிக்கிறார் என்பதை நீதித்துறை நடுவர் முன்பு சுமார் ஒன்றேகால் மணி நேரம் நேரடி வாக்குமூலம் அளித்ததாகக் கூறினார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா அறிமுகப்படுத்தும் வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு இருக்குமா என்ற கேள்விக்கு, இதற்கு அதிமுகவின் தலைமை முடிவு எடுக்கும் என ஜெயக்குமார் பதிலளித்தார்.