ஜெயக்குமார் வீட்டிலேயே இருக்கும் எடப்பாடி!
புழல் மத்திய சிறையில் இருந்த ஜெயக்குமாரை எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று பார்த்தபோது, ஓ. பன்னீர்செல்வத்தினை தவிர்த்து விட்டு சென்றதால் பல சலசலப்புகள் எழுந்தன. அதனால்தானோ என்னவோ தெரியவில்லை. நேற்று ஜெயக்குமார் விடுதலையாகி வீட்டிற்கு வந்ததும் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சேர்ந்தே சென்று ஜெயக்குமாரை சந்தித்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் இருந்துள்ளனர்.
தனது சிறை அனுபவங்கள் குறித்து சிரிப்பாகவும் வேதனையாகவும் கலந்துகட்டி கூறியிருக்கிறார் ஜெயக்குமார். சிறையில் இருக்க வேண்டிய சாதாரண வசதிகள் கூட இல்லை. பிளான் பண்ணி தான் இதெல்லாம் பண்ணியிருக்காங்க. கொசுக்கடியால் கையில் ஏற்பட்ட கொப்புளங்களை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் காட்டியிருக்கிறார்.
எல்லாருக்கும் டீ கொடுத்தபோது, எடப்பாடிக்கு டீ வைக்கப்பட்டதும், சர்க்கரை கம்மியாகத்தான் இருக்கிறது என்று சொல்லிவிட்டு வைக்க, எடப்பாடியோ, இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதனால நிறைய சர்க்கரை போடுங்க என்று சொல்லி, இன்னும் கொஞ்சம் சர்க்கரையை கேட்டு வாங்கி வாயில் போட்டுக் கொண்டிருக்கிறார் .
உடம்ப பாத்துக்குங்க . நல்லா சாப்பிடுங்க என்று பன்னீர்செல்வம் அறிவுறுத்தியிருக்கிறார். ஜெயவர்த்தன் ரொம்ப ஆக்டிவா இருக்கிறார். தினமும் நான் ஜெயவர்த்னிடம் பேசாம தூங்குவதே இல்லை. கோர்ட்டில் என்ன நடந்தது நீங்க எப்படி இருக்கீங்க? அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் நான் அவர் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்குவேன். நீங்க கைது செய்யப்பட்டதில் இருந்தே தைரியமா பேஸ் பண்ணி ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டியது ரொம்ப ஆக்டிவா செய்துட்டு வந்தார் என்று ஜெயவர்த்தனை பாராட்ட, எடப்பாடியை பார்த்துக் கையெடுத்து கும்பிடுகிட, 45 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.
தனது குடும்ப உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி , ஓ. பன்னீர்செல்வம் இவருக்கும் அறிமுகப்படுத்திய ஜெயக்குமார், தனது பெரிய மருமகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அப்போது, ’’எங்க வீட்டிலேயே எடப்பாடி இருக்குண்ணே.. பெரிய மருமகளின் சொந்த ஊர் எடப்பாடி தான்’’ என்று சொல்ல எடப்பாடிக்கு ஒரே ஆச்சரியமாம்.