×

’யானைப் பசிக்கு சோளப்பொறி..’ மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்ஜெட் - கே.எஸ்.அழகிரி

 


 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை   மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத பட்ஜெட் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக. ஆட்சி அமைகிறபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுகிற வகையில் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, நடுத்தர மக்களுக்கு எந்த சலுகையும் இல்லாத நிலை இவற்றிற்கெல்லாம் எவ்வித தீர்வும் இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்திருக்கிறது. எந்த நோக்கமும் இல்லாமல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

வருமான வரி கட்டுபவர்களுக்கும், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி விதிப்பிலும் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. உணவு, உர மானியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது. இந்திய உணவு கழகத்திற்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்ட மானியத்தில் ரூபாய் 64 ஆயிரத்து 910 கோடி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, யூரியா மானியத்தில் ரூபாய் 65 ஆயிரத்து 9 கோடி, அதாவது 30.8 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கான  திட்டம் எதுவுமில்லை: ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து அது நிறைவேற்றப்படாத நிலையில் அதை பெருக்குவதற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் 35 ஆயிரம் வேலைக்கு 1 கோடியே 25 லட்சம் பேர் விண்ணப்பிக்கிற அவலநிலையில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. சி.எம்.ஐ.இ. கணக்கீட்டின்படி, 20 கோடி வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டுள்ளது. 60 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய நிலையில் 40 கோடி பேருக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், நிதியமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள்  வழங்கப்படும் என்று கூறுகிறார். இது யானைப் பசிக்கு சோளப்பொரி போடுவது போல் உள்ளது.

வளர்ச்சி என்ற மாயத்தோற்றம்: இந்தியப் பொருளாதாரம் தொற்று நோய் பரவலின் போது எத்தகைய நிலையில் இருந்ததோ, அதிலிருந்து மீண்டதாக தெரியவில்லை. 2019-20 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூபாய் 145 லட்சம் கோடியாக இருந்தது, ரூபாய் 147 லட்சம் கோடியாக அந்தாண்டு இறுதியில் உயருகிற நிலையில் தான் பொருளாதாரம் இருந்தது. இதனால் இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்கிற மாயத் தோற்றத்தை மக்கள் நம்புவதாக இல்லை.

பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகள் 9 சதவிகிதத்திற்கும் மேலான வளர்ச்சியை நாடு கண்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் 8 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டது. ஆனால், இன்றைக்கு அதற்கு நேர்மாறாக பொருளாதாரம் கடுமையான பின்னடைவை சந்தித்து மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்திய பொருளாதாரம் சமநிலைத் தன்மையை இழந்து, ஒருசில தொழிலதிபர்கள் சொத்து குவிப்பதற்கான வாய்ப்புகள் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது. அதை தடுத்து அனைவருக்குமான வளர்ச்சி என்பதைக் காண முடியாத ஒன்றாக இருக்கிறது. இது பாஜக ஆட்சி யாருக்காக நடக்கிறது என்பதை என்பதை தெளிவுபடுத்துகிறது" என்று  தெரிவித்துள்ளார்.