தற்காப்புக்காக மோடி பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துகிறார்- கடம்பூர் ராஜூ
கோவில்பட்டியில் அதிமுக அமைப்பு செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறார் என்று கூறினார்கள். ஆனால் தமிழகம் இருளில் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளது. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது.
மின் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது இருந்து எழுச்சி தற்போது உள்ளது. எங்களை பற்றி சொன்ன சசிகலா போன்றவர்கள் காணாமல் போய் உள்ளார்கள். அதிமுக எம்பியை நீக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கூறினால் எப்படி இருக்குமோ அப்படி தான் சசிகலா கருத்தும். பொதுக்குழு, நீதிமன்றம் மூலமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அதிமுக என்று நிரூபமணமாகி உள்ளது. அதிமுக உள் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பாஜக தெளிவாக கூறிவிட்டது.
பிரதமர் மோடி கூறி தான் அதிமுகவில் இணைந்ததாக ஓ. பன்னீர்செல்வம் தான் கூறினார் தவிர பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை.தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் தற்போது வரை அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து பேசியதில்லை. அதிமுக உட்கட்சி தலையிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர், அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். யார் உள்ளே சென்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்” எனக் கூறினார்.