×

பா.ஜ.க.லிருந்து யாரும் மற்ற கட்சிகளுக்கு மாற மாட்டார்கள்.. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்ட வட்டம்
 

 

கர்நாடக பா.ஜ.க.லிருந்து யாரும் மற்ற கட்சிகளுக்கு மாற மாட்டார்கள் என்பதை என்னால் திட்டவட்டமாக சொல்ல முடியும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.


கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கர்நாடக மாநில பா.ஜ.க.வில் எந்த அதிருப்திகளும் இல்லை. எங்கள் கட்சியில் (பா.ஜ..க.) இருந்து யாரும் மற்ற கட்சிகளுக்கு மாற மாட்டார்கள் என்பதை என்னால் திட்டவட்டமாக சொல்ல முடியும். மற்ற கட்சிகளில் இருந்து யாரும் பா.ஜ.க.வுக்கு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 


பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறும். அந்த கூட்டத்தில், தலைவர்களின் உத்தேச மாநில சுற்றுப்பயணம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க கட்சி மேலிடத்திடம் இருந்து அழைப்பு வந்தால் டெல்லி செல்வேன். கர்நாடகாவில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்பில்லை. 

உக்ரைனில் ரஷ்ய குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சடலத்தை, உக்ரைனில் போர் நிறுத்தம் செய்யப்பட்டவுடன் கொண்டு வருவதற்கான செயல்முறை உடனடியாக தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.