×

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம்  கூட கொண்டு வரலாம்.. பா.ஜ.க.

 

காங்கிரஸூக்கு மக்கள் ஆணை கிடைத்தால் (ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால்) இந்துக்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம்  கூட கொண்டு வரலாம் என கர்நாடக பா.ஜ.க. அமைச்சர் தெரிவித்தார். 

கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக ஹிஜாப் தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வர நிர்வாகம் தடை விதித்தது. இருப்பினும், முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஆனால் அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனையடுத்து அந்த மாணவிகளுக்கு ஆதரவாக பல முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களையும் நிர்வாகம் கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதற்கு பதிலடியாக இந்து மாணவ, மாணவிகள்  காவித் துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக வெடித்தது. கர்நாடகாவில் பல இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இஸ்லாமிய பெண்களுக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவித் துண்டு அணிந்து முழக்கங்களை எழுப்பிய மாணவர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்நிலையில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த நேற்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கல்லூரி ஒன்றில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த தேச விரோத சக்திகளால் கொடி கம்பத்தில் இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக காவி கொடி ஏற்றப்பட்டதாக கூறினார்.

இந்த சூழ்நிலையில், ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் சுனில் குமார் கூறுகையில், காங்கிரஸூக்கு மக்கள் ஆணை கிடைத்தால் (ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால்) இந்துக்கள் அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம்  கூட கொண்டு வரலாம். சித்தராமையாவும், காங்கிரஸூம்  இத்தகைய மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். நேற்று (நேற்று முன்தினம்) கொடி அகற்றப்பட்டதாக டி.கே. சிவகுமார் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பொய்யான அறிக்கைகளில் நின்றார் என்று தெரிவித்தார்.