தைரியம் இருந்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவியுங்க.. கர்நாடக காங்கிரஸூக்கு சவால் விடுத்த பா.ஜ.க. அமைச்சர்

 
காங்கிரஸ்

உங்களுக்கு தைரியம் இருந்தால் 2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு முதல்வர் வேட்பாளர் யார் அறிவியுங்க என்று காங்கிரஸூக்கு அம்மாநில பா.ஜ.க அமைச்சர் சவால் விடுத்துள்ளார்

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றுவது குறித்த ஊகங்கள் மற்றும் அவரை பொம்மை (கைப்பாவை) முதல்வர் என்றும் அம்மாநில காங்கிரஸ் டிவிட்டரில் தொடர்ந்து டிவிட் செய்து வந்தது. இதற்கு கர்நாடக வருவாய்த் துறை அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆர். அசோகா பதிலடி கொடுத்துள்ளார். ஆர். அசோகா இது தொடர்பாக கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைவர்கள், எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை பா.ஜ.க. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சந்திக்கும் என்றும், அதை கட்சி கடைப்பிடிக்கும் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். 

பசவராஜ் பொம்மை

தெருவுக்கு வந்த தங்களின் உட்கட்சி பூசலை மறைக்க, முதல்வர் பசவராஜ் பொம்மை மாற்றப்படுவார் என காங்கிரஸ் தவறான தகவலை பரப்பி வருகிறது. காங்கிரஸூக்கு நாட்டில் எந்த அடித்தளமும் இல்லை. பா.ஜ.க.வின் தலைமை மற்றும் முதல்வர் மாற்றம் குறித்து பேச அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. காங்கிரஸால் தங்கள் கட்சியின் தேசிய தலைவரை நியமிக்க முடியவில்லை ஆனால் இன்று பா.ஜ.க. ஆட்சியில் முதல்வர் மாற்றம் பற்றி பேசுகிறார்கள். அமித் ஷாவோ, பிரதமரோ உங்களிடம் (முதல்வர் மாற்றம் பற்றி) சொன்னாரா? உங்கள் உட்கட்சி பூசலால் உங்கள் சொந்த கட்சிக்குள் விஷயங்கள் அழுகி விட்டன, அதை முதலில் சரி செய்யுங்கள்.

முதல்வரும் மாறப்போவதும் இல்லை,  பா.ஜ.க. மாநில தலைவர் நளின் குமார் கட்டீலும் மாறப்போவதில்லை, அவர்களின் தலைமையில் நாங்கள் தேர்தலுக்கு செல்வோம். எங்கள் முதல்வர் பசவராஜ் பொம்மை. தைரியமும், வீரமும், தார்மீகமும் இருந்தால் உங்கள் (காங்கிரஸ்)  முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? இதை பற்றி நீங்களே கேள்வி எழுப்புங்கள், உங்களுக்கு அறிவிக்க தைரியம் இல்லை, ஆனால் நீங்கள் மற்றவர்களை பற்றி பேச விரும்புகிறீர்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டால், சித்தராமையா மற்றும்  டி.கே. சிவகுமார் காங்கிரஸ் என இரண்டாக பிளவுப்படும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.