×

நாட்டின் வளர்ச்சிக்கு இலவச கல்வி, சுகாதாரம் முக்கியம், இந்த நலத்திட்டங்களை இலவசம் என்று கூற முடியாது.. கெஜ்ரிவால் பதிலடி
 

 

இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவச கல்வி மற்றும் சுகாதாரம் இன்றியமையாதது. இந்த நலத்திட்டங்களை இலவசம் அல்லது ரெவ்டி என்று கூற முடியாது என்று மோடியின் இலவச கலாச்சசார குற்றச்சாட்டுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார்.
 

பிரதமர் மோடி அண்மையில், ஓட்டுக்களை பெறுவதற்காக இலவச பொருட்களை  அரசியல் கட்சிகள் வழங்குகின்றன. நாட்டின் முன்னேற்றத்துக்கு இந்த இலவச கலாச்சாரம் ஆபத்தானது. பொருட்களை இலவசமாக கொடுத்தால் விமான நிலையங்கள் அல்லது சாலைகளை எப்படி உருவாக்க முடியும்?. வேலை வாய்ப்பு உருவாக்குதல், வருவாயை அதிகரிப்பது அல்லது வியாபாரம் செய்வதை எளிதாக்குதல்  போன்ற நீண்ட கால சரி செய்த நடவடிக்கைகளுக்கான ஒத்திசைவான உத்தியை எதிர்க்கட்சிகள் கொண்டிருக்கவில்லை. மாறாக தேர்தல்களில் வெற்றி பெற்று இலவசங்களை வழங்கி ஆட்சியில் அமர்வதில் மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டி சாட்டினார். மோடியின் இலவச கலாச்சாரம் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

டெல்லி யூனியன் பிரதேச முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது சுதந்திர தின உரையிலும், மோடியின் இலவச கலாச்சாரம் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். டெல்லியில் நேற்று டெல்லி அரசின் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவச கல்வி மற்றும் சுகாதாரம் இன்றியமையாதது. இந்த நலத்திட்டங்களை இலவசம் அல்லது ரெவ்டி என்று கூற முடியாது. 

தரமான கல்வி ஒரு தலைமுறையில் வறுமையை ஒழிக்க உதவும். கல்வி புரட்சியின் காரணமாக ஒரு ஏழையின் குழந்தை டெல்லியில் ஒரு வழக்கறிஞர் அல்லது பொறியியலாளர் ஆக வேண்டும் என்று கனவு காணலாம். ஏழைகளுக்கு இலவச கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வசதிகளை வழங்குவதன் மூலம் நான் ஏதாவது தவறு செய்தேனா?. நாங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, மொஹல்லா கிளினிக்குகளை அமைத்துள்ளோம். டெல்லியில் உள்ள அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி உள்ளது. மக்களுக்கு நல்ல சுகாதாரம் வழங்குவது இலவசம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.