கேரள முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்த காங்கிரஸின் கே.வி.தாமஸ்.. தலைமைக்கு கடிதம் எழுதிய கேரள காங்கிரஸ்
கேரள முதல்வர் பினராயி விஜயனை புகழ்ந்து பேசிய கே.வி. தாமஸூக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது.
கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது கட்சி மாநாட்டை கண்ணூரில் கடந்த 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில் நடைபெற்ற மாநில-மத்திய உறவு குறித்த கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி. தாமஸ் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள கூடாது என்று கே.வி.தாமஸை எச்சரிக்கை செய்து இருந்தது. ஆனால் அதனையும் மீறி கே.வி. தாமஸ் அதில் கொண்டார்.
மேலும், அந்த அமர்வில் கே.வி.தாமஸ் பேசுகையில், நாட்டின் சிறந்த முதல்வர்களில் ஒருவர் பினராயி விஜயன். அவர் கேரள முதல்வராக பதவியேற்றதை நினைத்து பெருமைப்படுகிறேன். கேரளாவில் கெயில் பைப்லைன் அவரது மனஉறுதியால் முடிக்கப்பட்டது என தெரிவித்தார். பினராயி விஜயனை கே.வி.தாமஸ் புகழ்ந்து பேசியது கேரள காங்கிரஸாருக்கு கடும் எரிச்சலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சி தலைமைக்கு கேரள காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியதாவது: அவர் (தாமஸ்) இப்போது எதையும் சொல்ல முடியும். கட்சியிலிருந்து அவர் விலகி செல்கிறார்.
கே.வி.தாமஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அவர் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்பதால் அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.வி. தாமஸ் கேரள காங்கிரஸின் செயல் தலைவராக இருந்தபோது பினராயி விஜயனிடம் ஏன் பெருந்தன்மையை அவர் காணவில்லை. மத்திய அமைச்சராக இருந்தபோதும், மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தியபோது கே.வி.தாமஸ் ஏன் பினராயி விஜயனின் மகத்துவத்தை காணவில்லை. இப்போது கே.வி.தாமஸ் சில ஒப்பந்தங்களை செய்திருக்க வேண்டும் அதனால்தான் பினராயி விஜயனிடம் பெருந்தன்மையை காண்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.