×

அவர் என்ன சாதாரண ஆளா?அவர் யார் தெரியுமா? திமுக  மீது குஷ்பு பாய்ச்சல்

 

 பழைய திமுக காரன் வந்து விடுவான். அப்புறம் அண்ணாமலை எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை ஏற்படும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு பாஜக பிரமுகர் குஷ்பூ கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அண்ணாமலை நடமாட முடியாதா? அவர் சாதாரண ஆள் அல்ல; அவர் யார் தெரியுமா? என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

 திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்கிறது.   இதை முன்னிட்டு ஓராண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது.  அந்த கூட்டத்தில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார்.  திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் அக்கூட்டத்தில் பங்கேற்றார்.

 அந்த கூட்டத்தில் அவர் பேசிய போது,  ’’பாஜகவையும் பிரதர் மோடியையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார்.   பாஜக காரர்கள் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகன் தமிழிசையை பிடித்து பாஜகவில் சேர்த்து இருக்கிறார்கள். அதே போல் திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜகவில் சேர்த்து இருக்கிறார்கள்’’என்று திமுகவினர் பாஜகவில் இணைந்து வருவதால் அந்த ஆத்திரத்தை இவ்வாறு வெளிப்படுத்திய ஆர்.எஸ்.பாரதி,

 ’’தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.  அவர் இப்படி பேசி வருவது சரியல்ல.  அவருக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன்.  பழைய திமுக காரன் மீண்டும் வந்து விடுவான்.  அதனால் அண்ணாமலை எச்சரிக்கையாக இருக்கும்படி  தெரிவித்துக் கொள்கிறேன் .   அண்ணாவைப் பற்றி தவறாக பேசினார் கிருபானந்த வாரியார்.  அதனால் அதற்குப் பிறகு அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது.  அதே நிலைமை தான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பேசியிருந்தார்.

 இந்த எச்சரிக்கை தமிழக அரசியலில், குறிப்பாக பாஜகவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.   இதற்கு, திராவிட இயக்கத்தின் வன்முறை வரலாற்றை அண்ணாமலை நினைவுபடுத்துவதன் மூலம்,  அப்போது திமுக செய்த வெட்கக்கேடான, வன்முறைச் செயல் இப்போது கவனத்திற்கு வந்திருக்கிறது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 இதற்கு அண்ணாமலை,   ’’தமிழக மக்கள் பொய்களையும் ஏமாற்றுகளையும் அன்றாடம் கேட்க வேண்டிய நிலை இருக்கிறது’’என்கிறார்.  ஆனால்,   அண்ணாமலைக்கு ஆர். எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளது குறித்து பாஜக பிரமுகர் குஷ்பூ கொந்தளித்துள்ளார்.

’’ எங்களை மிரட்டுகிறீர்கள். இது நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது’’என்று சொன்ன குஷ்பு, ‘’நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... நீங்கள் ஒரு சாதாரண ஆளை  மிரட்டவில்லை. துணிச்சலுக்கும் துணிவுக்கும் பெயர் போன ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டிப் பார்க்கிறீர்கள். அவர் எதற்கும் யாருக்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன்’’என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.