×

என்றும் ராஜா இளையராஜா! பாஜக சீனியர்கள் பகிரும் இரண்டு வீடியோக்கள்

 

 இளையராஜாவுக்கு எதிராக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.  உண்மையை பேசத் தயங்கும் தமிழகத்தில் மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி என்றும் ராஜா இளைய ராஜா! என்று பாஜகவின் தலைவர்களும், அக்கட்சியினரும் இளையராஜாவின் வீடியோக்களை வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார்.  அந்த முன்னுரையில் அம்பேத்கரும் மோடியும் ஏழ்மையில் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள்.   அதை ஒழிக்க பாடுபட்ட இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவு கண்டவர்கள்.  செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள்.   இன்றைக்கு மோடியின் செயல்பாடுகளைப் பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.

 மோடியை எப்படி அம்பேத்கருடன் ஒப்பிடலாம் மோடியைப் பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார் என்று இளையராஜா எப்படி சொல்லலாம் என்று கொதித்தெழுந்த திமுகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இளையராஜாவுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து வந்தனர்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி கே. சுப்பராயன்,  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,  திமுக பேச்சாளர் வே .மதிமாறன் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில்,   கருத்து சுதந்திரத்தின்படி இளையராஜா தனது மனதில் பட்டதை தெரிவித்திருக்கிறார் . இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?  அவர்மீது இத்தனை வன்மத்தை காட்ட வேண்டுமென்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன்,  தற்போதைய மத்திய இணை அமைச்சர் எல்.  முருகன்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இளையராஜாவை விமர்சிப்பதை கடுமையாக கண்டித்து வந்தனர்.


 இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக பாஜகவினர் சில வீடியோக்களை வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.   அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரையில் கூறப்பட்டிருந்த வாசகங்களை ஒளிபரப்பி அந்த ஒரு வீடியோ அமைந்திருக்கிறது.   அம்பேத்கர், மோடி, இளையராஜா மூன்று பேருமே அடித்தட்டில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்கள் என்று அந்த வீடியோவில் வாசகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.  அந்த வீடியோவின் இறுதியில் உண்மையை பேசத் தயங்கும் தமிழகத்தில் மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி என்றும் ராஜா இளையராஜா  என்ற வாசகங்களுடன் அந்த வீடியோ முடிகிறது.

 இன்னொரு வீடியோவில்,   ’’எனக்கு கிடைத்த விருதின் வாயிலாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும், தமிழகத்தையும் கவுரவிக்கிறது’’ என்று நான் நினைக்கிறேன் என இளையராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்றையும் பாஜகவினர் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


 இளையராஜாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த வீடியோக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  மத்திய இணை அமைச்சர் முருகன்,  தமிழக பாஜக நிர்வாகிகள்,  தொண்டர்கள் பலரும் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் #என்றும்_ராஜா_இளையராஜா என்ற ஹேஸ்டேக்கினையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

நமது பாரத பிரதமர் அவர்கள் பாரத ரத்னா டாக்டர்.அம்பேத்கர் கண்ட கனவுகளை, தனது இலட்சிய இலக்காக எண்ணி செயல்படுத்திக் கொண்டிருப்பவர் என்று, உண்மையை உலகு உணரும்படி உரைத்துக் கூறிய இசைஞானி #இளையராஜா #என்றும்_ராஜா_இளையராஜா என்கிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.


டாக்டர் அம்பேத்கரின் கனவுகளை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்  மோடி அவர்கள். இதைக் குறிப்பிட்ட இசைஞானியின் வார்த்தைகளுக்கு நன்றி.
#என்றும்_ராஜா_இளையராஜா என்கிறார் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

பாரத தேசத்தின் உயிர்நாடி #ஜனநாயகம். அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ள ஒரு புண்ணிய தேசம். #இசைஞானி யும் நம் நாட்டு பிரஜை. அவருக்கு கருத்து சொல்ல முழு சுதந்திரம் உண்டு. பிரதமரை ஆதரித்து பேசிவிட்டார் என்பதற்காக அவரை கருத்து சுதந்திர கண்மனிகள் விமர்சிப்பது வடிகட்டிய மூடத்தனம் என்கிறார் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.