×

பேனாவுக்கு மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது -ஸ்டாலினுக்கு கிருஷ்ணசாமி கேள்வி

 

 மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.   பேனா வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

 மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகில் நினைவிடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   இது அல்லாமல் மெரினா கடலில் 134 அடி உயரத்தில் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னம் எழுப்ப திமுக அரசு  திட்டமிட்டு வருகிறது.   இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் முல்லைவாடியில் புதிய தமிழகம் கட்சி கொடி ஏற்றும் விழாவில் பங்கேற்ற கிருஷ்ணசாமி அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   கள்ளக்குறிச்சி மரணம் நாட்டையே உலுக்கி எடுத்திருக்கிறது.   திமுக அரசின் செயல்பாடு சரியில்லாததால் தான் கலவரம் வன்முறை ஏற்பட்டிருக்கிறது.   அந்த கட்சி ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிருப்தி ஏற்பட்டு விட்டது மக்களுக்கு என்றார்.

 அவர் மேலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது. அந்த மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றார்.

மேலும், கடவுள் மறுப்பு உள்ளிட்டவை திராவிடத்தில் தான் உள்ளன.   திராவிட மாடல் என்பது இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவது தான். ஆன்மீக அரசியல் எதிர்ப்பு கொள்கை தான் திமுகவில் இருக்கிறது என்று கடுமையாக சாடினார்.