விரைவில் திமுக எம்.பிக்கள், அமைச்சர்கள் பானி பூரி விற்க போகிறார்கள் - குஷ்பு விமர்சனம்..
இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் விரைவில் பானிபூரி விற்க போகிறார்களா என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு விமர்சித்திருக்கிறார்..
தமிழகத்தில் அவ்வப்போது இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.. அண்மையில் ஆங்கிகத்துக்கு மாற்றாக அனைவரும் இந்தியை கற்க வேணும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. அதேபோல் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே ஏற்பட்ட இந்தி மொழி குறித்த வாக்குவாதமும் தேசிய அளவில் பேசுபொருளானது. இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி முன்பே இந்தி குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பதாகவும், ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகமும் இருந்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் தற்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள், இதுதான் திராவிடல் மாடல் என்று கூறினார்.
இது பெரியார் மண். இங்கு இருமொழிக் கொள்கை என்பதே தமிழக அரசின் கொள்கை என்று கூறிய அவர், மாணவர்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறினார். தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்குத் தெரியப்படுத்துவதற்காகவே இதைக் கூறுவதாகவும் குறிபிட்ட பொன்முடி, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் சொல்கிறார்கள், ஆனால் கோவையில் பானிப்பூரி கடை நடத்துபவர்கள் யார் ? இந்தி படித்தவர்கள் தானே என்று தெரிவித்தார்..
நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை என்றும், இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்றுதான் கூறுவதாகவும் சொன்னார். இந்நிலையிக் இந்தி பேசுபவர்கள் பானிப்பூரிதான் விற்க முடியும் என்கிற அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையாக வெடித்துள்ளது.. அவரது கருத்துக்கு பாஜகவினர் எதிரப்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில் அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தி பேசும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் விரைவில் பானிப்பூரி விற்க போகிறார்கள். அதை நாம் பார்க்க போகிறோம். இப்படி ஒரு வார்த்தையை அதுவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது வெட்கக் கேடு. இது போன்றவர்களிடம் நாம் இவற்றை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா என தெரியவேண்டும் " என்று விமர்சித்துள்ளார்..