×

 இப்போதைக்கு பொறுமையாகவே போவோம்! சமாதானப்படுத்திய எடப்பாடி!

 

அதிக இடங்களை கேட்டு அது கிடைக்காமல் போகவே பாஜக கூட்டணியில் இருந்து விலகி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.  இதையே சாக்காக வைத்து அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவை விட்டு விலகி வேறு கட்சிகளை கூட்டணியில் சேர்த்து போட்டியிடலாம் என்று அதிமுகவினர் கணக்குப் போட்டுக் கொண்டிருக்க,  அந்த கனவு எல்லாம் தவிடு பொடியாகும் படி அப்படிச் சொல்லிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

 உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவு போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.  அந்த வகையில்தான் பாஜக தனித்து போட்டியிடுகிறது.   அதனால் அவர்கள் எங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டார்கள் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லியே செய்தியாளர்களிடம்  எடப்பாடி பழனிச்சாமி சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போன கே.பி. முனுசாமி,  சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக சீனியர்கள் சிலர் எடப்பாடி பழனிச்சாமியை உடனே தொடர்பு கொண்டு,   என்ன இப்படி சொல்லிட்டீங்க.   இதுதான் நல்ல சமயம் இப்போதிலிருந்தே பிஜேபியை நாம் தூரத்தில் வைத்துக் கொள்வதுதான் நல்லது.   எம்.பி. தேர்தலிலும்  இதே போல பிஜேபியை சேராமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தான் நல்லது.  இதைத்தான் தொண்டர்களும் விரும்புகிறார்கள் என்று சொல்லி ஆத்திரப்பட்டிருக்கிறார்கள்.

 அதற்கு எடப்பாடி பழனிச்சாமி,    எனக்குத் தெரிந்து அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் மிக சொற்பமான வாக்குகளைத் தான் வாங்குவார்கள்.   நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தால் கூட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாங்கும் வாக்குகளின்  அடிப்படையில் அவர்களுக்கு சீட்டுகளை  கொடுத்துவிடலாம்.
அதனால் இப்போதைக்கு கூட்டணி முறிவு என்று எதையும் சொல்லிவிட வேண்டாம்.    மத்தியில் வேறு பாஜகவுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சி இருக்கிறது. அதனால் ஒரேயடியாக நாம் இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வரவேண்டாம்.  இப்போதைக்கு பொறுமையாகவே போவோம் என்று சொல்லி சமாதானப் படுத்தி இருக்கிறார்.