×

வாழ்க மக்களின் அரசியல் அறிவு! தங்கர் பச்சான் விளாசல்

 

அரசியலையும் அரசியல்வாதிகளையும் பற்றி திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.  

மக்கள் தேர்தலை புறக்கணித்தாலும் போட்டியிடும் வேட்பாளர்களின் குடும்பங்கள் மட்டுமே வாக்களித்து மக்களாட்சி எனும் பெயரில் நம்மை ஆள்வார்கள்!  அவர்களுக்கு தேவை எத்தனை விழுக்காடு வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதல்ல. தேர்தல் விதிகளை சீர் திருத்தாமல் அது வரை இதன் பெயர் மக்களாட்சி அல்ல என்று கடுமையாக சாடியிருக்கும் தங்கர்பச்சான், எந்த அரசியல் கட்சியும் தகுதியின் அடிப்படையில் தங்கள் உறுப்பினர்களை சேர்ப்பதில்லை; அதற்கு தகுதிகள் ஏதும் தேவையில்லை என முடிவெடுத்து விட்டனர். அதன் ‘பலனை’த்தான் மக்களாகிய நாம் தொடர்ந்து அனுபவிக்கிறோம் என்கிறார்.

மக்களிடம் சென்று நடி! மக்களின் பணத்தை கொள்ளை அடி! அடித்ததில் ஒரு பருக்கையை மக்களிடமே கொடு! மக்களை சிந்திக்க விடாமல் குடிகாரர்களாக ஆக்கு! அப்படியே மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கு! மீண்டும் ஆட்சியைப்பிடி! அரசியலை வியாபாரமாக்கு! மக்களாட்சியை கொன்று முடி! இதுதான் நவீன அரசியல்வாதி என்று விளாசி எடுத்திருக்கும் தங்கர்பச்சான்,  நிகழ் கால அரசியலை இதை விட எளிமையாகவும்,சுருக்கமாகவும் விளக்க முடியாது! தேர்தல் நாடகத்தை தோலுரிக்கும் இப்படத்தை பதிவு செய்தவருக்கு நன்றி என்று சொல்லி இந்த படத்தை பதிவிட்டிருக்கிறார் தனது டுவிட்டர் பக்கத்தில்.

நான் பதிவு செய்த எனக்குப்பிடித்தமான படங்களில் ஒன்று! என இந்த படத்தினை பதிவிட்டு இதுதான் 'திராவிட அரசியல்!' என்று சொல்லும் தங்கர்பச்சான், அரசியல் என்பது ஒரு தொழிலாக மாறிவிட்ட இக்காலத்தில் மக்களுக்கானத் தலைவர்கள் என்பவர்கள் வானத்தில் இருந்து திடீரென எங்கிருந்தோ குதிக்கபோவதில்லை. இருப்பதிலேயே தரமானவர்கள் யார் என்பதை நாம்தான் அடையாளம் கண்டு அவர்களிடத்திலுள்ள குறைகளை நீக்கி வளர்த்தெடுக்க வேண்டும் என்று சொல்லும் தங்கர்பச்சான், 

 நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் முடிவுகளை பார்த்து,  அனைத்து தேர்தல்களிலும் அரசியலை தொண்டாக எண்ணி மக்களுக்காகவே பாடுபடுபவர்களை தேர்ந்தெடுப்பது போன்றே நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களிலும் தகுதியான வேட்பாளர்களை மட்டுமே மக்கள் தேர்ந்தெடுள்ளார்கள்! வாழ்க மக்களின் அரசியல் அறிவு! வாழ்க தமிழ்நாடு!வாழ்க மக்களாட்சி!! என்கிறார்.