×

ஒற்றைத்தலைமை! -எம்.ஜி.ஆர். மாளிகையின் உள்ளே வெளியே
 

 

பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி யாராவது கோஷம் எழுப்பினால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிச்சாமி உட்பட 150 பேர் எம்ஜிஆர் மாளிகையின் உள்ளே விவாதித்துக் கொண்டிருக்கையில்,  எம்ஜிஆர் மாளிகையின் வெளியே ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் ஒற்றைத்தலைமை வேண்டும் என்று போட்டி கோஷம்  எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

 அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கும் நிலையில்,  அந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.   வழக்கமாக  மாவட்டச் செயலாளர்கள் துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பு வழக்கம் .  ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு இல்லை.

 பொதுக்குழுவை நடத்துவது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி,  வைத்திலிங்கம் உள்பட 150 பேர் ஆலோசனை நடத்தினர்.  எம்ஜிஆர் மாளிகையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் யாரும் செல்போன் எடுத்து உள்ளே வரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்பி மைத்ரேயன் கூட்டத்தை புறக்கணித்து  வெளியே சென்றார்.

 பொதுக்குழு கூட்டத்தில் யார் யாரை எல்லாம் அழைக்கலாம்,  என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வது என்பது குறித்து விவாதம் நடந்துள்ளது.   பொதுக்குழுவில் ஆட்சி இழந்ததற்கான காரணம் குறித்து பலரும் கண்டிப்பாக பேசுவார்கள்.   அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதம் நடந்திருக்கிறது.  சசிகலா விவகாரம் குறித்து கருத்து மோதல்கள் நிச்சயம் ஏற்படும்.  அதேபோல் ஒற்றைத் தலைமை பற்றி கோஷம் எழுப்பினால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.

 சசிகலாவின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துவார்கள்.  அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் பொதுக்குழு ,செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கி விடலாம் என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது . 

எம்ஜிஆர் மாளிகையின் உள்ளே,  பொதுக்குழுவில் ஒறைத் தலைமை கோஷம் எழுப்பினால் எப்படி எதிர்கொள்வது என்று விவாதித்துக் கொண்டிருக்க , எம்ஜிஆர் மாளிகைக்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் , எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களும் போட்டி கோஷம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.