×

”கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததால் ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை”

 

தனது சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததால் ஒபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேட்டியளித்துள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு பகுதியில் 10 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ-வும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், “அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒபிஎஸ் போராடி வருவதாகவும், கோவை மாவட்டத்தில் நிர்வாகிகளை நிர்ணயம் செய்வது, அவர்களை கையாள்வதில் தொய்வு காட்டியதால் கோவை செல்வராஜ் அவர்களை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்திருந்தார். அவருக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவதற்கான ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டிருந்த சூழலில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.

மாவட்ட செயலாளரை விட தலைமை நிலைய செயலாளர் பதவி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் மூத்த பதவி அதை வேண்டாம் என புறம் தள்ளிவிட்டு இன்று தனது சுயநலத்திற்காக திமுகவில் இணைந்துள்ளார். அவர் திமுகவிற்கு சென்றதால் ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை” என தெரிவித்தார்.